ஒருசமயம் அம்பாள் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி சிவயோகம் செய்யும்போது சிவபெருமான் அக்னி வடிவில் காட்சி தந்து அருளினார். அதனால் இத்தலத்து மூலவர் 'செம்மேனி நாதர்' என்றும், அம்பாள் 'சிவயோக நாயகி' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இக்கோயில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்மூடி விட்டது. 19ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் (2019) நடத்தப்பட்டது.
மூலவர் 'செம்மேனிநாதர்' என்னும் திருநாமத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அப்பர் பெருமான் தமது பதிகத்தில் 'கானூர் முளைத்த கரும்பு' என்று பாடுவதால் இவருக்கு 'கரும்பீஸ்வரர்' என்னும் திருநாமமும் உண்டு என்பது தெரிகிறது. அம்பிகைக்கும் 'சௌந்தர நாயகி' என்ற மற்றொரு திருநாமமும் உண்டு.
பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர், நால்வர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர். பரசுராமர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 10 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். ஆள் அரவமற்ற பாதை. ஊர் எதுவும் கிடையாது. எனவே திருக்காட்டுப்பள்ளி கடைத்தெருவில் உள்ள முருகன் கோயிலில் உள்ள குருக்களைத் தொடர்பு கொண்டு, அவரையும் அழைத்துக் கொண்டுச் சென்று தரிசனம் செய்யவும்.
|